கோவையில் தள்ளாத வயதிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு கொடுக்கும் கமலாத்தாள் பாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி முக்கிய உணவு, விலைவாசி உயர்வால் ஒரு இட்லி குறைந்தது ரூ.6 முதல் ஸ்டார் ஓட்டல்களில் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட இட்லியின் விலை 1.17 ரூபாய் வரை பில் கொடுக்கப்பட்ட சமத்துவமும் நடந்தது.  காலை மற்றும் இரவு உணவில் இட்லி பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உயர்ந்து வரும் விலைவாசியும் பொருட்படுத்தாமல் 85 வயதான பாட்டி லாபம் இல்லாமல் ஒரு இட்லி வெறும் ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.

காலை நேரத்தில் பெரிய, பெரிய ஓட்டல்களை மிஞ்சும் அளவுக்கு இந்த 1 ரூபாய் இட்லி பாட்டியின் கடையில் பயங்கர கூட்டம் அலை மோதுகிறது. 

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த பாட்டிக்கு வயது 85, இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது வீட்டு வேலைகளை செய்து விட்டு பின் இட்லி கடையை தொடங்கி விடுகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் ரெடி செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இட்லி வியாபாரத்தை தொடங்கிய இந்த கமலாத்தாள் பாட்டி, தொடக்கத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்துள்ளார். பின்னர் விலை வாசி உயர்வால் படிப்படியாக உயர்ந்து இப்போ ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இட்லிக்கு 75 பைசா மட்டுமே விலையை ஏற்றியுள்ளார்.

இதனால், இங்கு 1 ரூபாய் இட்லி வாங்க காலையிலேயே  கடையில் கூட்டம் குவிந்துவிடும். தள்ளாத வயதிலும் கூன்விழுந்த இந்த பாட்டி, விறகு அடுப்பில் சுட்டு, ஆவி பறக்க, பறக்க   சுறுசுறுப்பாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார் கமலாத்தாள்.

இவரது கடைக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் இங்கு வந்து இட்லி வாங்கி கொண்டு செல்கிறார்கள். கமலாத்தாள் பாட்டியை சுற்று வட்டார பகுதிகளில் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று பெயர் வைக்கும்  அளவுக்கு பயங்கர ஃபேமஸ் ஆகிவிட்டார்.

இவர் இட்லி மாவு தயாரிக்க கிரைண்டர் பயன்படுத்துவது இல்லை. மேலும் சட்னி, சாம்பார் வைக்க மிக்சியில் செய்வது  இல்லை. தனது கையாலே இட்லி மாவு தயார் செய்வது, ஆட்டுக்கல்லில் சட்னி அரைத்தும், பாட்டியின் சுவையான அந்த சாம்பார்க்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரெகுலர் கஸ்டமர்.

இது குறித்து பாட்டி கமலாத்தாள் பாட்டி கூறியதாவது, நான் 30 வருஷமா இட்லி வியாபாரம் செய்றேன். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றேன். கடந்த 10 வருஷம் ஒரு இட்லி ரூ.1-க்கு விற்கிறேன். என்னை நம்பி வரக்கூடிய பசங்க, குழந்தைங்க, கூலி தொழிலாளர்கள் ஏமாறக்கூடாது என்பதால் இந்த வயதிலும் இட்லி வியாபாரம் செய்கிறேன். மாவு, சட்னி, சாம்பாருக்கு தேவையானவற்றை ஆட்டுக்கல்லில் நானே அரைத்து பக்குவமாக சுவையாக தருவதால் என்னை நாடி வர்றாங்க. பூலுவப்பட்டி சந்தைக்கு வருவோர் இங்கு வந்து இட்லி சாப்பிடாமல் போகவே மாட்டாங்க. என்னை எல்லோரும் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அன்பாக சொல்லுவாங்க. மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும்பா. காசு, பணம் வேணாம் என்றார். 1 ரூபாய் இட்லி பாட்டி பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே, பாட்டியின் சேவையை பாராட்டி மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கியுள்ளனர். அதேபோல, பாரத் கேஸ் நிறுவனம் கியாஸ் சிலிண்டர் கொடுத்துள்ளது.