கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் ஆனைமலை மலைத்தொடரில் இருக்கிறது வால்பாறை. மலைப்பிரதேசமான இங்கு பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் வால்பாறை திகழ்கின்றது. இங்கு அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வால்பாறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியின் அருகே குட்டி யானை ஒன்று சுற்றிதிரிந்திருக்கிறது. வெகுநேரமாக யானை உலவுவதை கண்ட பொதுமக்கள், அது ஊருக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக வனப்பகுதிக்குள் விரட்ட முற்பட்டிருக்கின்றனர். அப்போது தான் யானையின் காலில் கட்டி இருந்தது தெரியவந்தது. அதன் காரணமாக யானை நகர முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்கள், பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த வனத்துறை காவலர்கள் யானைக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதற்குள்ளாக குட்டி யானையின் தாய் யானை அங்கு வந்துள்ளது. இரண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால், குட்டியானைக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் போனது. இந்தநிலையில் தற்போது அந்த குட்டி யானை தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தென்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குட்டி யானையின் காலில் இருக்கும் கட்டியால் அது அவதிக்குள்ளாகி அதே பகுதியில் சுற்றிவருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குட்டியானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் அதை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.