ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்..! உலக யோகா தின செய்தியில் சத்குரு
ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நமக்குள் இருந்து வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நமக்குள் இருந்து வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
உலக யோக தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
உலகத்தில் யோகாவை ஒரு மதமாகவோ, நம்பிக்கை முறையாகவோ, தத்துவமாகவோ இல்லாமல் உள்நிலை நல்வாழ்வுக்கான ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக் கொண்டு இன்றோடு 7 வருடங்கள் ஆகிறது.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. இது ஒரு அற்புதமான சாத்தியம்.
யோகா என்ற வார்த்தைக்கு சங்கமம் என்று பொருள். அதாவது, நம் தனித்தன்மையின் எல்லைகளை தொடர்ந்து அழித்து, இந்த கணத்தில் இங்கே மிகச் சிறிய உயிராக இருந்து கொண்டே முழு பிரபஞ்சத்தின் அழியா தன்மையை உணர்கின்ற திறமையை அடைய வழிவக்கும் சாத்தியம் யோகா ஆகும்.
நமக்கு எப்படி வெளிப்புற நலனுக்காக ஒரு விஞ்ஞானம் இருக்கிறதோ அதுபோலவே உள்நிலை நலனுக்காக ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, அதை தான் நாம் யோகா என்கிறோம்.
இந்த வருட உலக யோகா தினம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த வருடம் கோவிட் பெருந்தொற்று நம் தலைமுறையின் வாழ்க்கையை எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தலை கீழாக புரட்டி போட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவிலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டு அலைகளை பார்த்து விட்டோம். நாம் எதிர்பார்த்ததை விடவும் இது நீண்ட காலம் தொடர வாய்ப்பு இருப்பதாக வைராலாஜி நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அதனால் நல்ல எதிர்பாற்றல் கொண்ட உடலையும், துடிப்பும் சமநிலையும் கொண்ட மனதையும் நாம் உருவாக்கி கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அப்போது தான், இந்த கடுமையான காலத்தை குறைந்தபட்ச சங்கடங்களோட நம்மால் கடந்து செல்ல முடியும்.
ஆரோக்கியம் மற்றும் உடல்-மன நலன்கள், நமக்குள் இருந்து தான் வரமுடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மருத்துவரிடம் இருந்தோ, மருத்துவத்துறை நிபுணர்களிடம் இருந்தோ பெறக் கூடியது அல்ல.
ஈஷாவின் மூலம் நாம் இந்த பெருந்தொற்று சூழ்நிலையை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய, சமநிலையான மனதும், உயிரோட்டமான உடலும் தரக்கூடிய மிக எளிமையான பயிற்சிகளை இணையத்தில் இவசமாக வழங்கி உள்ளோம்.
இந்த உலக யோகா தினத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் யோகாவின் சில அம்சங்களையாவது கொண்டுவர வேண்டும் என்று சத்குரு கூறியுள்ளார்.
ஈஷாவின் இலவச யோகா பயிற்சியை ஆன்லைனில் கற்றுக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.