ஈஷாவிற்கு எதிராக அந்நிய சக்திகள் பொய் பிரச்சாரம்! உள்ளூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு

ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பணத்திற்காக பொய் பிரச்சாரம் செய்யும் அந்நிய சக்திகளை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

public stages protest in support of isha yoga center at coimbatore

ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பணத்திற்காக பொய் பிரச்சாரம் செய்யும் அந்நிய சக்திகளை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் இன்று (நவ.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுபள்ளம், மத்வராயபுரம், முட்டத்துவயல், முள்ளாங்காடு, தாணிக்கண்டி, மடக்காடு, நல்லூர்வயல்பதி, பட்டியார்கோயில்பதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பழங்குடி மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ஈஷாவால் தங்களுடைய கிராமங்கள் அடையும் பயன்கள் குறித்தும், அதை தடுக்க அந்நிய சக்திகள் செய்யும் சூழ்ச்சிகள் குறித்து விரிவாக பேசினர்.

ஈஷாவின் வழிகாட்டுதலில் 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு விற்ற விவசாயிகள்

தாணிகண்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி. காய்த்ரி அவர்கள் பேசுகையில், “வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிகண்டி, மடக்காடு, முள்ளாங்காடு உள்ளிட்ட ஏராளமான பழங்குடி கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஈஷாவையே சார்ந்து உள்ளோம். ஈஷாவின் உதவியால் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். 

எங்களுடைய குழந்தைகளை ஈஷா தான் படிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இரவு எத்தனை மணிக்கு அழைத்தாலும் ஆம்புலன்ஸ் அனுப்பி எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எங்களுடைய பழங்குடி மக்களின் நிலங்களை ஈஷா ஆக்கிரமித்துவிட்டதாக சிலர் பணத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் பொய். என்னுடைய அம்மா முத்தம்மாளும் இந்த பொய் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. உண்மை என்னவென்று எங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் நாங்கள் எப்போதும் ஈஷாவிற்கு ஆதரவாகவே இருப்போம்” என்றார்.

போளூவாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் பேசுகையில், “தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யும் காலத்திற்கு முன்பு இருந்தே நாங்கள் ஈஷாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறோம். ஈஷா வந்த பிறகு தான் எங்கள் பகுதிக்கு சாலை வசதிகள், பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள் கிடைத்துள்ளது.  கொரோனா காலத்தில் ஈஷா தன்னார்வலர்கள் செய்த உதவிகளை நாங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டோம். பிரதமர் உட்பட உலகமே போற்றும் ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் அமைந்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

இந்நிலையில் சில போலி அமைப்புகள் பணத்திற்காகவும், விளம்பரம் தேடி கொள்வதற்காவும் ஈஷாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழும் எங்களுக்கு உண்மை எது? பொய் எது என்று தெரியாதா? சிலர் வெளியூரில் இருந்து பணம் கொடுத்து வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து ஈஷாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் எங்கள் கிராமத்தில் தேவையற்ற குழப்பத்தையும், அமைதியை சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

தொண்டாமுத்தூரின் பசுமை பரப்பை 33% ஆக அதிகரிக்கும் வரை மரம் நடும் பணி தொடரும்..! காவேரி கூக்குரல் தகவல்

திரு. குமார் அவர்கள் பேசுகையில், “சத்குருவின் வழிகாட்டுதலில் நாங்கள் தொடங்கிய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது.  இதனால், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பலன்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடி மக்களின் பெயர்களை பயன்படுத்தி இந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க கூடாது. அதை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் சதி திட்டத்தையும் முறியடிப்போம்” என்றார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios