கோவை குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும் சேலம் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரியா(வயது 27) என்கிற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியா தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இருவரும் கோவையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். சந்திரசேகர் கோவையில் இருக்கும் சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து சந்திரசேகர் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று காலை வழக்கம்போல சந்திரசேகர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் பிரியா மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய சந்திரசேகர் வெகு நேரமாக கதவை தட்டியிருக்கிறார். ஆனால் பிரியா கதவை திறக்காதது கண்டு சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார். அப்பொழுது மனைவி பிரியா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் சந்திரசேகர் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கோவை காவலர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரசேகரிடம் இது குறித்து விசாரணை 
செய்து வருகிறார்கள். மேலும் திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளதால், இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறார்.