ஓசி மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்டான 7 போலீஸ்.. விசாரணையில் அம்பலம்
மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக்கூடாது என்பதால் பீளமேடு வரை போலீஸ் வாகனத்தை உறவினர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளார்கள்.
மட்டன் பிரியாணிக்காக பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை வழியில் உறவினர்களோடு சந்திக்க போலீசார் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதிஷ் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பொள்ளாச்சி நகர மாணவர் அணி அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த 13ம் தேதி கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோவைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியம் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் வேனை பின் தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் வந்துள்ளனர். திடீரென அவர்களுக்காக போலீஸ் வேன் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் வண்டியில் இருந்து இறங்கி வந்து உறவினர்களை கைதிகள் சந்தித்து பேசினர். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் சலுகை காட்டியதையடுத்து 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக சஸ்பெண்டான 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக்கூடாது என்பதால் பீளமேடு வரை போலீஸ் வாகனத்தை உறவினர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளார்கள். அங்கு போலீசாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர் . பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேசி உள்ளனர். இதனையடுத்து, பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்தது