கடந்த சில வாரங்களாக வெங்காய விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதன்காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்க்கும் சூழல் ஏற்பட்டது.

இதனிடையே வெங்காய தட்டுப்பாட்டை குறைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காய விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. உச்சபட்சமாக கடலூரில் நேற்று முன்தினம் கிலோ 10 ரூபாய் வரையிலும் குறைத்து விற்கப்பட்டது. கோவை மாவட்டத்திற்கு பல வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். ஆனால் தற்போது வெங்காய விளைச்சல் குறைவானதால் கோவைக்கும் வெளிநாட்டு வெங்காயங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கோவையில் இருக்கும் எம்.ஜி.ஆர் மார்கெட்டிற்கு கடந்த இரண்டு நாட்களில் 1100 டன் வெங்காயங்கள் வந்துள்ளன. அவை மூன்று ரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நல்ல வெங்காயங்கள் கிலோ 90 ரூபாயையும், 2ம் மற்றும் 3ம் தர வெங்காயங்கள் கிலோ 70 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இனி வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.