சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா நோய் உலக நாடுகள் பலவற்றையும் பாதித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 39 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

தமிழகத்திலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விமான நிலையங்கள் அனைத்திலும் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில்  மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அந்த இளைஞர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.

அச்சுறுத்தும் கொரோனா..! சென்னை விமானங்கள் அதிரடி ரத்து..!

கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் குடல் அறுவை  சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதில் அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரது சளி மற்றும் ரத்த  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.