நீலகிரியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை…
கூடலூரில் தேயிலை தோட்டம் அதிகமாக இருப்பதால் புலியை பிடிக்க முடியவில்லை. ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டிய புலி மேலும் ஒருவரை அடித்துக்கொன்றது.
கூடலூரில் தேயிலை தோட்டம் அதிகமாக இருப்பதால் புலியை பிடிக்க முடியவில்லை. ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டிய புலி மேலும் ஒருவரை அடித்துக்கொன்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடலூரில் கடந்த வாரம் புகுந்த புலி, ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை அடித்துக் கொன்றது. மேலும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளையும் புலி இறையாக்கிக் கொண்டது.
புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறையினர் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் அவர்களுக்கு போக்கு காட்டி மசினகுடிக்கு சென்ற புலி, அங்கு கால்நடைகள் மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை அடித்துக் கொன்றது. ஒரே வாரத்தில் இருவர் உட்பட 4 பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூடலூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வனத்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. மசினகுடி வனப்பகுதிக்குள் புலி நடமாட்டத்தை கண்டுபிடித்த வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கூடலூரில் தேயிலை தோட்டம் அதிகம் இருப்பதால் புலியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த புலி கால்நடைகளை அதிகம் தாக்குவதால், முதுமலை புலிகள் காப்பகம் அருகே ஆடு, மாடு மேய்க்க தடைவிதிக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.