கோவை மாவட்டம் ஆலந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் தள்ளாத வயதிலும் உணவகம் நடத்தி உழைத்து வருகிறார். இவரது உணவகத்தின் சிறப்புக்குரிய விஷயம் என்னவெனில் எந்த நிலையிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருவது தான். அதனால் அப்பகுதி மக்கள் இவரை இட்லி பாட்டி என்றே அன்புடன் அழைத்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். உணவகங்கள் பலவும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போதும் இட்லி பாட்டி கமலாத்தாள் ஒரு ரூபாய்க்கு தான் இட்லியை விற்று வருகிறார்.

ஊரடங்கால் விலைவாசி உயர்ந்து பொட்டுக்கடலை, உளுந்து போன்றவை தாறுமாறாக விலை ஏற்றப்பட்டு விற்கப்படும் போதும் தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் இருக்கும் கமலாத்தாள் தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்குவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து அவர் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.  கமலாத்தாளின் நிலையை அறிந்து கோவையில் இருக்கும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக சமூக ஆர்வலரும் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் சகோதரருமான எஸ்.பி. அன்பரசன் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று 10,000 ரூபாயும் 50 கிலோ அரிசியும் வழங்கி உதவினார். அவற்றை பெற்றுக்கொண்ட மூதாட்டி நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சமூக ஆர்வலர் எஸ்.பி. அன்பரசனின் நல்லறம் அறக்கட்டளை சார்பாக கோவை, குனியமுத்தூர், புளியகுளம், பேரூர், பி கே புதூர், தொண்டாமுத்தூர் என 6 இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு அவசரகால உணவு வழங்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவின்றி தவிக்க கூடாது என்கிற நல்லெண்ணத்துடன் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கும் பணியை நல்லறம் அறக்கட்டளை துரிதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறியிருக்கும் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி அன்பரசன், தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் ஏழை மக்கள் உணவின்றி தவிக்க கூடாது என்றும் அதற்காக  நல்லறம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மூலம் தினந்தோறும் 50 ஆயிரம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஊரடங்கு நிறைவடையும் வரையில் இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றுடன் அறக்கட்டளை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. நல்லறம் அறக்கட்டளையின் சார்பாக செய்யப்பட்டு வரும் நிவாரணப்பணிகளால் அப்பகுதியினர் பலரும் பயனடைந்து வருகின்றனர்.