கோவை அருகே மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (62) பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). இவரது மனைவி கல்பனா (33). கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டால் சரவணகுமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி வந்தார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மாமியார் நாகேஸ்வரியுடன் மருமகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கல்பனா மாமியாரின் தலையில் பலமாக கடித்தார். வலி தாங்க முடியாமல் மாமியார் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது தலையில் 6 தையல் போடப்பட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்தனர்.