கோவை காந்திபுரம் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருக்கும் ஊழியர்களிடம் சிகரெட்  கேட்டிருக்கிறார்.

சிகரெட்டிற்கு டாஸ்மாக் கடையில் அதிக பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. எதற்காக அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என்று அந்த வாலிபர் தட்டிகேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கடை ஊழியர்கள் சமையல் கரண்டியால் மது போதையில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில் அவர் பலத்த காயமடைந்து இருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த வாலிபர் நஞ்சப்பா சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வாலிபரை மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர் என்கிற விவரங்கள் தெரியவில்லை. இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின் முடிவில் டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கியதன் காரணத்தால் தான் வாலிபர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார் மேலாளர் கவுதம் (வயது 26), ஊழியர்கள் கிரி (26), பாபு என்கிற சியான் (46), வினோத் (26) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.