கோவையில் காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்த முருகன் கூலித்தொழிலாளியின் மகள் நந்தினி (21). கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன் பள்ளியில் இருந்து பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலைக்கு சென்ற பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என தினேஷ் வற்புத்தியதாக கூறப்படுகிறது. ஆகையால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் பேசமால் இருந்து வந்தனர். மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தொல்லை கொடுத்தார். ஆனால், நந்தினி மறுத்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், மாணவி நந்தினியை கொலை செய்த தினேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.