கோவை போத்தனூரை சேர்ந்த 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 காவலர்களுக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று புதியதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாம் கொரோன தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் தற்போது மீண்டும் 3 காவலருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவையில் 3 காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார். போத்தனூரை சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஒரு ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 காவலர்களும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பணிக்கு வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோவையில் 134 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.