திருவோணம் பம்பர் லாட்டரி: அடிச்சது கோவை நடராஜனுக்கு ரூ.25 கோடி ஜாக்பாட்!

கேரள மாநிலம் திருவோணம் பம்பர் 2023 லாட்டரியில் கோவையை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது

Kerala Thiruvonam Bumper lottery Coimbatore natarajan wins first prize smp

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரிக்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரிச் சீட்டு வியாபரம் நடத்துகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைக் காலங்களிலும் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவோணம் பம்பர் லாட்டரி 2023 (BR-93) குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசாக ரூ.25 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி, மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம், நான்காவது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டது. 85 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 74.51 லட்சம் டிக்கெட்டுகள் விற்பணையாகின.

அதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, TE 230662 என்ற டிக்கெட் நம்பருக்கு முதல் பரிசு விழுந்தது. கோழிக்கோட்டைச் சேர்ந்த எஸ். ஷீபா (D 4884) என்ற லாட்டரி ஏஜென்ட் மூலம் விற்கப்பட்ட அந்த லாட்டரி டிக்கெட் வயலாரில் வாங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரூ.25 கோடி முதல் பரிசுக்கான டிக்கெட்டை  பெற்றவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு திருவோணம் பம்பர் 2023 லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது.

திருவோணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி பெறும் வெற்றி எண் இதுதான்; அந்த அதிர்ஷ்டசாலி எங்கே?

பாலக்காட்டில் உள்ள வாளையரில் உள்ள பாவா லாட்டரி துணை ஏஜென்சியில் இருந்து சில ஆண்கள் கூட்டாக வாங்கிய மூன்று டிக்கெட்டுகளில் முதல் பரிசு பெற்ற TE 230662 டிக்கெட்டும் ஒன்றாகும். உடல்நிலை சரியில்லாத நண்பரைப் பார்த்துவிட்டு தமிழகம் திரும்பும் போது தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்து அவர்கள் லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக தெரிகிறது. 

மேலும், வெற்றித் தொகையை தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,  ரூ.25 கோடி பம்பர் பரிசை நண்பர்கள் 4 பேர் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக துறை அலுவலர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பரிசு பெறுபவர், 30 சதவீத வருமான வரி பிடித்தம், 10 சதவீத ஏஜென்ட் கமிஷன் போக சுமார் ரூ.15.75 கோடியைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios