Asianet News TamilAsianet News Tamil

ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து கிராம மக்களுக்கு மருத்துவசேவை வழங்கும் ஈஷா! 489 பேர் ரத்த சோகையிலிருந்து மீண்டனர்

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் வழங்கிய இலவச மருத்துவ சேவையின் மூலமாக விவசாய கூலி தொழிலாளிகள், மலைவாழ் மக்கள், பெண்கள் உட்பட 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளனர்.
 

isha joined hands with ayush and giving medical services
Author
Coimbatore, First Published Oct 10, 2020, 3:00 PM IST

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் பல ஆண்டுகளாக பல்வேறு விதமான சேவைகளை செய்து வருகிறது.

இதன் ஒரு அம்சமாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இக்கரைப்போளூவாம்பட்டி, நரசீபுரம், தேவராயபுரம், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமப் பஞ்சாயத்துக்களில் ’ஆயுஷ் – ஈஷா பாரம்பரிய நலவாழ்வு திட்டம்’ என்ற பெயரில் ஒரு மருத்துவ திட்டத்தை 2017-ம் ஆண்டு தொடங்கியது. சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அந்நோயில் இருந்து மீட்டெடுப்பது பிரதான பணியாக மேற்கொள்ளப்பட்டது.

isha joined hands with ayush and giving medical services

அதன்படி, ஈஷா தன்னார்வலர்களின் உதவியுடன் 49 கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த சோகை கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, 10 முதல் 19 வயது வரையிலான பதின் பருவ ஆண்களுக்கும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனை முடிவுகளின்படி, 654 பேருக்கு ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவர்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த பாரம்பரிய மருந்துகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஒரு மண்டலத்துக்கு ஒரு முறை (48 நாட்கள்) அவர்களின் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டது. தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் களப்பணியின் விளைவாக, 489 பேர் ரத்த சோகை நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 75 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இது ஆயுஷ் அமைச்சகத்தின் 70 சதவீத இலக்கை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

isha joined hands with ayush and giving medical services

இதுதவிர, பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், ஆட்டோக்களில் சென்றும், வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடிந்தது.

ரத்த சோகை தவிர்த்து காய்ச்சல், தலைவலி, கை, கால் மற்றும் மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சினைகள், வயிறு தொடர்பான கோளாறுகள் போன்றவற்றை தீர்ப்பதற்காக 20 கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ’ஆயுஷ் சேவக்’ என்ற பெயரில் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டார். அவர் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு ஏற்ப பாரம்பரிய மருந்துகளை வழங்குவார். இப்பணியின் மூலம் சுமார் 22 ஆயிரம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

isha joined hands with ayush and giving medical services

மேலும், இத்திட்டத்தின் கீழ் உடல்நல குறைபாடுகள் வராமல் தடுக்கும் விதமாக பள்ளி குழந்தைகள், மகளிர் உட்பட 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக யோகாவும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 10 கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கடந்த ஒரு வாரமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ரத்த சோகையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios