கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வரவே அங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக தம்பிதுரை சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 

அதில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தம்பிதுரைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு ஊசி போட்டுள்ளனர். அப்போது ஊசி உடைந்து தம்பிதுரையின் உடலில் சிக்கியதாக தெரிகிறது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தம்பிதுரை ஊசி போட்ட இடத்தில் வலியால் துடித்துள்ளார். இதனால் வேறொரு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கிறார்.

அதில் உடைந்து போன ஊசியின் ஒரு பகுதி தம்பிதுரையின் உடலில் சிக்கியிருந்தது தெரிந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த தம்பிதுரை இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் முறையான பதில் தராமல் தம்பிதுரையை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே உடலில் ஊசியின் ஒரு பகுதியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தம்பிதுரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்து தம்பிதுரையின் உடலில் சிக்கியிருக்கும் ஊசியை அகற்ற மருத்துவர்கள் முயன்று வருகின்றனர்.

ஏற்கனவே கடந்து வாரம் தமிழகத்தில் இதுபோல இரண்டு சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்று நிகழ்ந்திருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.