அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... கோவையில் மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு..!
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த ஜூலை 31ம் தேதி முதல் வரும் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமறைப்படுத்த மாவட்ட ஆணையர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்,
* கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
* கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், 5,6 மற்றும் 7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும், ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.
* மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் காலை 8 முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
* கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
* கேரள - தமிழ்நாடு எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகள் வழியாக, கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனை சான்று மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச் சாவடியிலேயே Random ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.