தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். எனவே, அடுத்து வரும் 2 நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.