தென்மேற்கு பருவமழை நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கூறிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் செப்டம்பர் 8 ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.