கோவையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்ற பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் உக்கடம் சிஎம்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (40). இவர் பாஜகவின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவின்  அம்மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவர் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார்.

அதே இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாஜக நிர்வாகி இந்த பெண்ணிடம் அடிக்கடி இரட்டை வார்த்தைகளில் தவறாக பேசி வந்தார். இதனை நான் கண்டித்தேன். சம்பவத்தன்று நான் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தேன். அங்கு வந்த ஜோதி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் சத்தம் போட்டதும், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியேறினார். 

இதுதொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.