இந்த ரணகளத்துலேயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது இல்லையா?!...என்கிற வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. அந்த தகவலைக் கேட்டபோது. என்ன விவகாரம்?.....

கோயமுத்தூரில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. அது முஸ்கன் எனும் பத்து வயது சிறுமியும், அவளது ஏழு வயது தம்பியும் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் டிரைவர் மோகனகிருஷ்ணனால் கடத்தப்பட்டனர். அவர்களை பொள்ளாச்சிக்கு கடத்திச் சென்றவன், வழியில் அங்கலக்குறிச்சியில் தன் நண்பன் மனோகரனையும் அழைத்துக் கொண்டான். இந்த இரண்டு நபர்களும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, இரு குழந்தைகளையும் வாயில் விஷம் ஊற்றியும், வாய்க்காலில் தள்ளியும் கொலை செய்தனர். இந்த ரெட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவரும் விரைந்து கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில், போலீஸிடமிருந்து தப்பிச் செல்கையில் மோகனகிருஷ்ணன்  என்கவுண்ட்டர் செய்யப்பட்டான். இரண்டாம் முக்கிய கொலைகாரனான மனோகரனுக்கு கோயமுத்தூர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. 


இதை எதிர்த்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அமர்வு என எல்லா இடங்களுக்கும் சென்றனர். அத்தனையிலும் மனோகரனுக்கு தூக்குத் தண்டனையே உறுதியானது. இப்போது கடைசி முயற்சியாக ஜனாதிபதியின் கருணையை வேண்டி மனு வைக்கப்பட அவகாசம் தரப்பட்டுள்ளது. அவரும் மறுத்துவிட்டால் தூக்குதான். 
இந்த நிலையில் கோயமுத்தூரின் சிறையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பாக கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறான் மனோகரன்.  ஏன் இந்த மாற்றம்? என்று கேட்டால் வந்து விழும் பதில் என்ன தெரியுமா? ‘லவ்! அதுவும் லேடி போலீஸ் மீது லவ்’. விரிவாக விசாரித்தபோது ”கோயமுத்தூர் சிறையில் மனோகரன் இருக்கையில், அவரை வழக்கு வாய்தாவுக்காக கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போலீஸ் டீமில் பெண் போலீஸும் இருந்தனர்.

அதில் ஒரு பெண் போலீஸ் மீது மனோகரனுக்கு லவ் உருவாகி இருக்கிறது. தன் லவ்வை தைரியமாக அந்த லேடி போலீஸிடம் சொல்லிட்டார். அந்தப் பொண்ணு திட்டியிருக்கிறார். ஆனாலும் தன் லவ்வை மறக்கவும், மறைக்கவும் முடியாமல் மீண்டும் மீண்டும் லவ்வை  சொன்னதோடு, தன் கையை காயப்படுத்திக் கொண்டு லவ்வை நிரூபித்திருக்கிறார். 
அந்த பொண்ணு இந்த விவகாரத்தை உயரதிகாரிங்கட்ட சொல்லி அழுதாங்க. அவங்க மனோகரனுக்கு ‘சிறப்பு’ அரச்சனை நடத்தியும் திருந்தலை. அதான்  மாத்திட்டாங்க.” என்று தகவல் வருகிறது. வெளங்கிடும்!