ஆட்கொல்லி புலியை பிடிக்க வந்த கும்கி யானைகள்… புலியை சுட மாட்டோம் என வனத்துறை உறுதி!
40 நவீன கேமராக்கள், 3 ட்ரோன்கள், வேட்டை நாய்கள், அதிரடிப்படையினர், மருத்துவக் குழுவினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது..!
40 நவீன கேமராக்கள், 3 ட்ரோன்கள், வேட்டை நாய்கள், அதிரடிப்படையினர், மருத்துவக் குழுவினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி மற்றும் தேவன் எஸ்டேட் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி ஒன்பதாவது நாளாக நீடித்து வருகிறது. ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. இதற்காக அதிரடிப் படையினருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
வனத்துறைக்கு போக்கு காட்டும் புலி, அடர்வனம் மற்றும் புதர்களுக்குள் மறைந்துகொள்வதால் அதனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒன்பதாவது நாளாக வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவக் குழுவினர், வேட்டை நாய்கள் புலியை தேடி வரும் நிலையில் ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க இரண்டு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகளின் மீது ஏறி புதர்களுக்குள் புலியை தேட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஆட்கொல்லி புலிகள் தேடும் பணிகளை தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் நீரஜ் குமார் நேரில் ஆய்வு செய்தார். புலியை தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் 10 குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், 40 நவீன கேமராக்கள், மூன்று டிரோன்கள் மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல போவதில்லை என்றும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவே முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.