கோவை அருகே இரண்டு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிப் புறப்பட்ட அரசு பேருந்து குட்டையூர் அருகே பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட இருசக்கர வாகனம் மீது மோதிய பேருந்து, வலது புறமாக திரும்பி மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண்ரோஸ் என்பவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.