ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பேருந்தை கோபியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக சங்கரன் என்பவர் பணியில் இருந்தார்.

பேருந்து மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் பொகளூர் அருகே வந்த போது அதே சாலையின் எதிரே டெம்போ வேன் ஒன்று வந்துள்ளது. அதி வேகத்தில் தாறுமாறாக வந்த டெம்போ, கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பெரியசாமி(45) என்பவரின் வலது கை துண்டானது. பலர் காயமடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பேருந்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற டெம்போ வேனை தீவிரமாக தேடி வருகின்றனர்.