லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு சில நாட்கள் முன்னர் தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்திருந்தது .

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதையடுத்து ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் , விநாயகர் கோவில்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவையில் இருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை, கோனியம்மன் திருத்தலங்களில் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.