SP Velumani Son Marriage Reception : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் திருமண விழாவில் AI தொழில்நுட்பம் மூலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தும் விதமான வீடியோ காட்சிகள், மீனாட்சி அம்மன் சிலை பரிசு, அரசியல் பிரபலங்களின் வருகை என்று ஏராளமான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
SP Velumani Son Marriage Reception : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் மற்றும் தீக்ஷனாவிற்கு கடந்த 3ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோவை கொடிசியா மையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை தொடங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பின் முக்கிய நிகழ்வாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவரது வருகையையொட்டி அவினாசி சாலை முதல் கொடிசியா வரையில் பேனர், கட் அவுட் என்று கிட்டத்தட்ட 1 கிமீ தூரத்திற்கு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்னதாகவே திருமண வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே மேடைக்கு வந்த செங்கோட்டையன் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஏற்கனவே செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருந்து வரும் நிலையில் இன்றைய நிகழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இருவரும் சந்திப்பதை தவிர்த்துள்ளனர்.
சிறுவர்களை வைத்து… யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி, சித்ரா குண்டர் சட்டத்தில் கைது!
இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் இருவரும் சிறிது நேரம் சந்தித்து பேசினர். இதையடுத்து இருவரும் ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவைச் சேர்ந்த ராதிகா, சரத்குமார் உள்பட அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வின் 2ஆவது முக்கிய அம்சமாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதன் மூலமாக அவர் மணமக்களை வாழ்த்தியது போன்று காட்டப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மணமக்களுக்கு மீனாட்சி அம்மன் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஶ்ரீவைகுண்டம் அருகே பஸ்ஸை மறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
நடிகர் சிவக்குமார், ரஞ்சித், சத்யராஜ், கௌதமி என்று சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதால், அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


