தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களின் ஆவணங்கள் நாடு முழுவதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்து கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சென்னையில் இருக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு புகார் கடிதம் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வில் இருக்கும் புகைப்படத்திற்கும் அனுமதி கடித புகைப்படத்திற்கு வித்தியாசம் உள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சூர்யா என்கிற மாணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுப்பப்பட்டுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.