இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தீவிரம் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் மற்றொருபுறம் மனிதர்களை நம்பி வாழும் ஐந்தறிவு உயிரினங்களும் ஊரடங்கு உத்தரவால் அவலங்களை சந்தித்து வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் தெருநாய்கள், பூனைகள், பறவைகள் போன்ற ஜீவா ராசிகள் உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பொள்ளாச்சியில் உணவின்றி தவிக்கும் தெருநாய்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் உணவு வழங்கி வருகின்றனர். பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து பசியை போக்கி மனித நேயத்துடன் செயல்படுகின்றனர். உணவு கிடைக்காமல் பசியில் உலாவும் நாய்களும் தீயணைப்பு வீரர்கள் கொடுக்கும் பிஸ்கட்டை ஆர்வமுடன் உண்ணுகின்றன. தினமும் தீயணைப்பு வீரர்கள் இதை வழக்கமாக கொண்டிருக்கவே அவர்கள் வந்ததும் தெரு நாய்கள் கூட்டமாக வந்து வால்களை ஆட்டிக்கொண்டு அவர்களை சூழ தொடங்குகின்றது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக ஆர்வலர்கள் பிற உயிரினங்களுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.