சென்னை அரும்பாக்கம் அருகே இருக்கும் ராணி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக 36 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரபல ரவுடியாக சென்னையில் சுற்றித்திரிந்த இவரை கைது செய்த காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

இதை தெரிந்துகொண்ட ரவுடி ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து சென்னை போலீசார் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை தமிழகம் முழுவதும் இருக்கும் காவல் துறையினருக்கு அனுப்பிவைத்து அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக கைது செய்யும்படி கூறியிருந்தனர்.

இந்தநிலையில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்கு கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை மாநகர போலீசாரை உஷார் படுத்தினர். உடனே சம்பந்தப்பட்ட அந்த தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற கோவை காவலர்கள் அங்கே சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் கைது செய்யப்பட்ட தகவல் சென்னை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை சென்னைக்கு கொண்டுவர அரும்பாக்கம் காவலர்கள் கோவை சென்று இருக்கிறார்கள்.

நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.