தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படும். 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாம், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடத்தப்படும். அனைத்து நாட்களிலும் யானைகளுக்கு பயிற்சிகள், சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிறப்பாக கவனிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான யானைகள் முகாம் இன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களில் இருந்து 28 யானைகள் லாரி மூலமாக தேக்கம்பட்டி வந்துள்ளன. மதுரை, திருநெல்வேலி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம் உட்பட தமிழகத்தின் முக்கிய கோவில் யானைகள் இந்த முகாமில் பங்கேற்கின்றன. தேக்கம்பட்டிக்கு வருகை தந்த யானைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக அலுவலகங்கள், பாகன்கள் தங்குமிடம், சமையல் கூடம், யானைகள் குளிக்குமிடம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்றரை மாதங்கள் யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட இருக்கும் நிலையில் அதை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.