கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு ரயில் ஒன்று கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாலக்காடு-கஞ்சிக்கோடு அருகே இருக்கும் கோட்டைக்காடு என்கிற இடத்தின் அருகே இரவு 11 மணியளவில் ரயில் வந்தபோது தண்டவாளத்தை காட்டு யானை ஒன்று கடக்க முயன்று இருக்கிறது. அதை எதிர்பார்க்காத என்ஜின் ஓட்டுனர் ரயிலை பிரேக் போட்டு நிறுத்த முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அதி வேகத்தில் ரெயில் வந்ததால் உடனடியாக ரயிலை நிறுத்த முடியவில்லை.

இதனால் படுவேகத்தில் வந்த ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்து சில அடி தூரம் தள்ளி யானை விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு, ஓட்டுநர் ரயிலை ஓட்டிச் சென்றார். தகவலறிந்து வனத்துறை அதிகாரிகளும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை நடந்தது. பின் அங்கேயே குழிதோண்டப்பட்டு யானை புதைக்கப்பட்டது. உயிரிழந்த யானையின் வயது 20 முதல் 30 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானை அடிபட்டு பலியான இடம் யானைகள் கடக்கும் பாதை கிடையாது என்றனர். அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் தான் யானை கடக்கும் பகுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தண்டவாளங்களில் யானை கடக்கும் பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்தில் தான் ரயிலை இயக்க வேண்டும் என ஓட்டுனர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இனி அந்த பகுதியிலும் அது கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.