கேரள மாநிலம் குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவரது மகன் கார்த்தி. வயது 24 .கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதிகமான குடி பழக்கத்திற்கு ஆளானவர் என்று தெரிகிறது. தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சம்பவத்தன்றும் மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த முடிவெடுத்திருக்கிறார். இதற்காக ஆனைமலை பகுதிக்கு வந்த அவர்கள் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அதிகமான போதை ஏறிய நிலையில் கார்த்தி, ஆனைமலையில் இருக்கும் தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பரின் 5 வயது மகளான ராதிகாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிட்டாய் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

2 மணி நேரம் கழித்து ராதிகாவை நண்பரின் வீட்டில் கார்த்தி விட்டுள்ளார். அப்போது ராதிகாவின் உடம்பில் சிறு சிறு காயங்கள் இருந்திருக்கிறது. அது குறித்து சிறுமியின் தந்தை விசாரித்திருக்கிறார்.  கார்த்தி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.  இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை கார்த்தியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். பின்னர் அரிவாளால் வெட்டவும் செய்துள்ளார்.

சிறுமியை கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்த தகவல் அறிந்த அந்த பகுதியினர், அவரை அடித்து வெளுத்துள்ளனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள், பொதுமக்களிடம் இருந்து கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். சிறுமி ராதிகா சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி தற்போது கவலைக்கிடமாக இருப்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மீதும் அவரது நண்பர் முருகன் என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.