கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (42 ). மருத்துவரான இவர் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து மருத்துவமனை சென்று பணியாற்றி வந்திருக்கிறார்.

இன்று வழக்கம்போல காலை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை பார்ப்பதற்காக பழனிசாமி ரோந்து சென்றார். ஒவ்வொரு நோயாளிகளாக பார்த்துக் கொண்டு வந்தவர் திடீரென அங்கே மயங்கி விழுந்திருக்கிறார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மருத்துவர் பழனிச்சாமி என்ன காரணத்தால் உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.