தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். சென்னை, கோவை உட்பட இதுவரையில் டெங்கு பாதிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் தற்போது வரையிலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும் என 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கின்றனர். மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.