கோவை மசக்காளிபாளையம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தருமபுரியைச் சேர்ந்த பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதி கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் பிரசாந்திற்கு ஏற்கனவே 21/2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தைக்கு காய்ச்சல், சளி இருந்ததை அடுத்து அங்கன் வாடி மைய மருத்துவ முகாமுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு 21/2 மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அன்று மாலையே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு ஒரு வாரமாக சளி, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் அந்த பாதிப்பினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே சவுரிபாளையத்தைச் சேர்ந்த மற்றொரு 21/2 மாத குழந்தை ஒன்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்ததாக அச்சம் பரவியது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறு. தடுப்பூசியின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்ய தனி குழு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார். தற்போது  அந்த 2 முகாம்களிலும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடப்பட்ட 30 குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.