பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்தையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து பச்சை மண்டலத்தில் இருந்த கோவையில், விமான சேவை தொடங்கிய பிறகு பாதிப்புகள் மீண்டும் தொடங்கிவிட்டன. கடந்த வாரம் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஆனாலும், கோவையிலேயே வசிக்கும் மக்கள் யாருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியில் வேலை பார்த்த  இளைஞருக்கும் நேற்று பொள்ளாச்சி தாளக்கரை ஊராட்சியில் திருமணம் நடக்க இருந்தது. போதிய போக்குவரத்து வசதியில்லாததால் கடந்த 29-ம் தேதி மணமகன் தனது குடும்பத்துடன் டெல்லியில் இருந்து டிராவல்சில் புறப்பட்டார். இவர்களுடன் தேனியை சேர்ந்த 3 பேரும் பயணம் செய்தனர். தேனியை சேர்ந்தவர்கள் திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பொள்ளாச்சி தாளக்கரை ஊராட்சிக்கு வந்தனர்.

மணப்பெண்ணின் வீட்டில் வாழைமரம், தோரணங்கள் கட்டப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன் வீட்டார் பெண்ணின் உறவினர் வீட்டில் தங்கினர். இந்நிலையில், தேனியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து பொள்ளாச்சி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மணமகன் தங்கிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகளின் அறிவுரைப்படி நேற்று நடக்க இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மணமகன் உள்பட 5 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த பெண் வீட்டாரையும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.