கோவையில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும் 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், கடந்த 7ம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அங்கு, மஞ்சுளாவை தனியாக அழைத்து சென்று ஒரு மணி நேரம் பேசிய அவரது பெற்றோர்கள், மூளைச்சலவை செய்த, நிலையில், மஞ்சுளா கணவருடன் வாழ விருப்பமில்லை என எழுதி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றுள்ளார். இதனால், மனமுடைந்த கோவிந்தராஜ் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனை கண்ட பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.