தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. நேற்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையைப் போல் கோவை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.