தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்பதால் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, பழங்கள் கூட நடமாடும் வாகனங்கள் மூலமாக வீடு தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


விற்பனையாளர்களின் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி, மளிகை பொருட்கள், பழங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறைச்சி, மீன் விற்பனையும் ஆன்லைன் மூலம்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சென்னைவாசிகள் தனியார் இறைச்சி கடைகளின் ஆப் மூலம் ஆர்டர் செய்து வீட்டிலேயே டெலிவரி பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது கோவையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யவும், அவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கவும் அனுமதி அளித்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இனி ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுகளுக்கே இறைச்சி டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.