கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே இருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(37). இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அய்யப்ப பக்தரான பிரகாஷ், ஒவ்வொரு வருடமும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். வழக்கம் போல இந்த வருடமும் மாலையணிந்த அவர் விரதம் மேற்கொண்டிருந்தார். தினமும் மாலை நேரத்தில் அருகே இருக்கும் அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார்.

அங்கு நடைபெறும் பஜனையில் கலந்து கொண்டு உடுக்கை அடித்து பாட்டு பாடுவார். சம்பவத்தன்றும் மாலை கோவிலுக்கு சென்ற பிரகாஷ் பஜனையில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனது செல்போனை அருகே ஒரு இடத்தில் தனியாக வைத்து விட்டு உடுக்கை அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பிரகாஷின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போனை தனியாக வைத்திருந்ததால் பிரகாஷ் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அவர் கூறும் போது, கடந்த ஆண்டு தான் 17 ஆயிரம் ரூபாய் கொடுத்து செல்போனை வாங்கியதாகவும் தனது குழந்தைகள் எப்போதும் அதில் தான் விளையாடுவார்கள் என கூறினார். நல்லவேளையாக கோவிலில் தனியாக வைத்த போது செல்போன் வெடித்தது. குழந்தைகளோ அல்லது தானோ வைத்திருக்கும் வெடித்திருந்தால் காயம் ஏற்பட்டிருக்கும் என்றார். மேலும் தான் வணங்கும் ஐயப்பன் தான் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

செல்போன் வெடித்தது குறித்து அதை வாங்கிய கடையில் சென்று பிரகாஷ் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர்கள், போன் வாங்கி ஒரு வருடம் கடந்து விட்டதால் வாரண்ட்டி முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.