காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்..! விவசாயிகளுக்கு இலவசம்

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில்  ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கப்பட்டது. 
 

cauvery calling plans to plant one lakh saplings in thondamuthur and  its free for farmers

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில்  ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 60 கிராமங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற உயர் மதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகளை நேரில் சந்தித்து நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைக்க உள்ளனர். தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் டிம்பர் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று கொள்ள 93429 76519, 95004 77437 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க - காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்.! ரூ.3-க்கு டிம்பர் மரக்கன்றுகள் விநியோகம்

இத்திட்டத்தின் தொடக்க விழா தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அட்டுக்கல் கிராமத்தில் உள்ள கே.வி.ஆர். தோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் திரு. ராஜ்மோகன் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எங்களுடைய ரோட்டரி சங்கத்தின் ‘கோ க்ரீன்’ என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து ‘பசுமை தொண்டாமுத்தூர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளோம் . முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 15,000 மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ” என்றார்.

தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.மதுமதி விஜயகுமார் அவர்கள் பேசுகையில் "இத்திட்டத்தினை அனைத்து கிராம விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாங்கள் முன்னெடுத்து செல்வோம்" என உறுதி அளித்தார்

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், “பொதுவாக ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என சொல்வார்கள். ஆனால், ‘மரம் நடுவதன் மூலம் நாம் ஒரே கல்லில் 4 மாங்காய்களை பெற முடியும். முதலாவதாக, மரங்கள் வளர்ப்பதன் மூலம் மண்ணின் வளம் பெருகும். மண்ணில் சத்து இருந்தால் தான் அதில் விளையும் பொருட்களில் சத்து இருக்கும். சத்தான உணவை உண்டால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இதையும் படிங்க  - தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

இரண்டாவது, டிம்பர் மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். ஒற்றை பயிர் விவசாயத்திற்கு பதிலாக மரம்சார்ந்த பல பயிர் விவசாயம் செய்தால் பயிர்களில் இருந்து தொடர் வருமானமும், சில ஆண்டுகளுக்கு பிறகு மரங்களில் இருந்து மொத்த வருமானமும் கிடைக்கும்.

மூன்றாவதாக, மரங்கள் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மிக மிக அவசியம். பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அதிகளவில் மரங்கள் நட வேண்டும். நான்காவதாக, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், நதிகளுக்கு புத்துயிரூட்டவும் மரங்கள் வளர்க்க வேண்டும்” என்றார்.

தொடக்க விழாவில், தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு. அரவிந்த் ஆறுச்சாமி, முன்னோடி விவசாயியும் ஈஷா தன்னார்வலருமான திரு. வள்ளுவன், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு. குமார், இயக்குநர் திருமதி.நாகலட்சுமி தோட்டத்தின் உரிமையாளர் சின்னசாமி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், அப்பகுதி விவசாயிகள், பேரூராட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், மாணவிகள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios