Asianet News TamilAsianet News Tamil

காவேரி கூக்குரல் மூலம் இந்தாண்டு 2.5 கோடி மரங்கள் நட திட்டம்..! கடந்த 2 ஆண்டுகளில் 2.10 கோடி மரங்கள் நடவு

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளை கொண்டு இந்தாண்டு 2.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 
 

cauvery calling plan to plant 2 and half crores trees in next year
Author
Coimbatore, First Published Feb 18, 2022, 2:34 PM IST

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளை கொண்டு இந்தாண்டு 2.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன், 1.25 லட்சம் விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 1,700 விவசாயிகள் 6.33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,600 விவசாயிகள் 5.29 லட்சம் மரக்கன்றுகளையும், சேலம் மாவட்டத்தில் 2,500 விவசாயிகள் 5.26 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.  சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 1,800 விவசாயிகள் 5.76 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

20 ஆண்டு கால ஈஷாவின் சுற்றுச்சூழல் களப் பணியின் காரணமாக இதுவரை 6.5 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மூலம் நடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சத்குரு தொடங்கிய ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ இயக்கமும் மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அவ்வியக்கம் தயாரித்த நதிகளை புத்துயீருட்டுவதற்கான விரிவான செயல்முறைகள் அடங்கிய 700 பக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அதை செயல்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஒரிசா, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்கள் இப்பரிந்துரைகளை தங்கள் மாநிலத்தில சொந்தமாக செயல்படுத்தி வருகின்றன” என்றார்.

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு. தெய்வசிகாமணி பேசுகையில், “நான் 15 ஏக்கரில் மரங்களுக்கு இடையில் விவசாயம் செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பழ மரங்களையும் டிம்பர் மரங்களையும் சேர்த்து வளர்த்து வருகிறேன். பழ மரங்களில் இருந்து வருடந்தோறும் வருமானம் வருகிறது. டிம்பர் மரங்கள் நீண்ட கால முதலீடாகவும் உள்ளது. ஈஷா நர்சரிகளில் பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை எடுத்து நட்டு வருகிறேன். தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் எளிய விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.

செய்யூர் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி திரு. விமல் தாஸ் பேசுகையில், “சத்குருவின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் காரணமாக தரிசாக கிடந்த எனது 25 ஏக்கர் நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரங்கள் நட தொடங்கினேன். காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் தண்ணீர் வசதி குறைவான என் நிலத்தை நேரில் வந்து ஆய்வு செய்தனர். தண்ணீரையும், மண்ணின் தன்மையும் ஆய்வு செய்து அதற்கேற்ற மரங்களை பரிந்துரைத்து நட செய்தனர். இதன்மூலம், எதிர்காலத்தில் நிலத்துடன் சேர்த்து டிம்பர் மரங்கள் மூலம் கோடிக்கணக்கான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

கூவத்தூரைச் சேர்ந்த விவசாயி திரு. கணேஷ் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு டிம்பர் மரங்களின் மதிப்பை உணர்ந்து எனது ஏழரை ஏக்கர் பூர்விக நிலத்தை முழுமையான மரக்காடாக மாற்றியுள்ளேன். அதற்கு இடையில் வருடாந்திர பயிர்களை செய்து வருகிறேன்.” என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios