Asianet News TamilAsianet News Tamil

2.1 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்..!

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது.
 

cauvery calling movement made record with plants more than 2 crores trees
Author
Coimbatore, First Published Jan 29, 2022, 2:53 PM IST

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதற்காக அவர் தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை பைக் பயணம் மேற்கொண்டு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதன் விளைவாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம்காட்ட துவங்கினர். மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் மாவட்டந்தோறும் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து மரங்கள் நடுவதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். பின்னர், மரம் நட விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளின் நிலங்களின் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் சிறப்பு களப்பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் பயனாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் (2020, 2021) தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 2.1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். அத்துடன், சுமார் 1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். இயற்கை முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக 32 நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, விவசாயிகளிடம் இருந்தே மரக்கன்றுகளை நேரடியாக கொள்முதல் செய்யும் விதமாக அவர்களுக்கு நர்சரி தொடங்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தை சமூக வலைத்தளங்களில் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 20 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டுள்ளனர். 128 விவசாய வாட்ஸ் அப் குழுக்கள் செயல்படுகின்றன. மாதந்தோறும் 4 லட்சம் விவசாயிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். மேலும், அரசின் வேளாண் காடு வளர்ப்பு சார்ந்த திட்டங்கள் குறித்தும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவதற்காக 890 கிராமப்புற இளைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுமட்டுமின்றி, மறைந்த வேளாண் வல்லுனர்கள் திரு. நம்மாழ்வார் ஐயா, திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள், காந்தி ஜெயந்தி, வன மகோத்சவம் போன்ற முக்கிய தினங்களில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக ஒவ்வொரு முறையும் தலா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 650 விவசாயிகளின் தோட்டங்களில் மரம் நடும் நிகழ்வுடன் சேர்த்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் உட்பட ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் மூலமாக இதுவரை ஒட்டுமொத்தமாக 6.2 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை சேர்ந்த விவசாயி திரு.வள்ளுவன் பேசுகையில், “என்னுடைய தோட்டத்தில் தென்னைக்கு இடையில் மரங்கள் நட்டதன் மூலம் மண் வளம் அதிகரித்துள்ளது. நீலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நீரின் தேவை குறைந்துள்ளது. விளைச்சலும் விளைப்பொருளின் தரமும் அதிகரித்துள்ளது.” என்றார். விவசாயி திரு. வஞ்சிமுத்து “நான் காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல்பாடுகளை கேள்விப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரம் நட்டேன். இப்போது அம்மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது. மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது” என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios