கரூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய்-மகள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி திரிபுர சுந்தரி (57) மற்றும் மாமியார் சாவித்ரி (78) ஆகியோருடன் கரூர் அருகே நெரூரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் மற்றும் சதாசிவ பிரமேந்திராள் கோவிலுக்கு இன்று அதிகாலை காரில் வந்தனர். காரை சங்கரே ஓட்டி வந்தார். சாமி தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், கார் வெள்ளக்கோவில் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சென்னியப்பன் மீது மோதி அவரையும் இழுத்துக்கொண்டு சில மீட்டர் தூரம் வரை சென்றது. இறுதியில் அந்த பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் திரிபுரசுந்தரி, சாவித்ரி, சென்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கும், மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் நீண்ட நேரம் போராடி படுகாயமடைந்த சங்கரை மீட்டனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.