கோவையில் பேரதிர்ச்சி... கருப்பு பூஞ்சை தொற்றால் கண்பார்வையை இழந்த 30 பேர்...!
கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் கண் பார்வை இழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரதாண்டவம் ஆடிய கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மேற்கொண்ட போர்கால நடவடிக்கைகளும், முழு ஊரடங்கும் நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தினசரி பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களிடையே கருப்பு பூஞ்சை தொற்று குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் கண் பார்வை இழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு 264 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நோய் தொற்றின் ஆரம்ப நிலையில் வந்த பலருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் குணமடைந்துள்ளதாகவும், தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். துணியால் ஆன முகக்கவசத்தை அணிபவர்கள் முகம் ஈரமாகிவிட்டால் அதனை அணியக்கூடாது என்றும், தூய்மையான முறையில் துவைத்து காய வைக்கப்பட்ட முகக்கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கண்கள் சிவப்பாக மாறுதல், மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், மூக்கடைப்பு, கண்களைச் சுற்றி வீக்கம், கண் பார்வை குறைபாடு, கண் வலி, பல் வலி, பற்கள் ஆடுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.