கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் செவிலியர்களும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். சுயநலமின்றி பொதுநலத்துடன் மக்களுக்காக, கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்திவருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சரியான உணவு கூட கிடைக்காத அவலம் இருந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய முதல்வர் அசோகன், அலட்சியம் காட்டியுள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவருகின்றனர். அவர்களில் சிலருக்கு கொரோனா இருந்ததால் மற்றவர்களும் அங்கிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது. அதனால் பயிற்சி மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்திருக்கின்றனர். ஆனால் விடுதி சமையல்காரர்கள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து சென்றுவிட்டதால், மருத்துவர்களுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சி மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் புகாரளித்தும் கூட, மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அதனால் இதுகுறித்து பயிற்சி மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் புகாரளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அசோகனின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சாதிய ரீதியான நிர்வாகம், கரிசணமில்லாத மருத்துவம், மாணவர்களை மரியாதையுடன் நடத்தாதது என பல குற்றச்சாட்டுகள் இருந்துவந்துள்ளன. 

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த அசோகனை, பணிமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.