நிறுவனத்தின் நன்மதிப்பே உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்..! ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் ‘அமுல்’ எம்.டி. அறிவுரை

”வர்த்தகத்தின் நோக்கமும், நிறுவனத்தின் நன்மதிப்பும் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்” என ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் ‘அமுல்’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஆர்.எஸ்.சோதி அறிவுரை வழங்கினார்.
 

amul md speech on isha insight function

”வர்த்தகத்தின் நோக்கமும், நிறுவனத்தின் நன்மதிப்பும் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்” என ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் ‘அமுல்’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஆர்.எஸ்.சோதி அறிவுரை வழங்கினார்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக பங்கேற்ற திரு.ஆர்.எஸ்.சோதி அவர்கள் பேசுகையில், “எந்த காரணத்திற்காகவும் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்து கொண்டது கிடையாது. அதனால் தான் எங்களின் அமுல் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இப்போது குஜராத் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் எங்கள் வர்த்தக்கத்தை விரிவு செய்து இருக்கிறோம். அமுல் பொருட்களின் மீதான நன்மதிப்பே எங்களின் வளர்ச்சிக்கு அடித்தளம்” என்றார்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் திரு.பவன் கோயங்கா பேசுகையில், “நான் எப்போதும் எனக்கான ஆசான்களை உருவாக்கி கொண்டே இருக்கிறேன். நான் தினமும் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன். அது தான் என்னை முன்னேற்ற பாதையில் முன்னோக்கி அழைத்து செல்கிறது. தலைமை பொறுப்பிற்கு வரும் போது பணிவுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், துருதிருஷ்டவசமாக, பலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து கொள்கிறார்கள். உண்மையில், எல்லாம் தெரிந்த நபர் என்று யாரும் இங்கு இல்லை. நீங்கள் எத்தகைய உயர் பதவியை அடைந்தாலும் கற்றுக்கொள்ளும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்...

நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும். ஆகவே, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். வர்த்தக துறையில் நீங்கள் நீண்ட காலம் வெற்றிகரமாக செயல் செய்ய வேண்டுமென்றால், தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியம்” என்றார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில், “உங்களுடைய ஜாதகத்தில் எழுதப்பட்டு இருப்பதால் மட்டும், உங்களுக்கு வெற்றி கிடைத்து விடாது. சரியான விஷயங்களை கண்டறிந்து அவற்றை முழு ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் செய்து முடிக்கும் போது தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

முதலில் உங்கள் இதயத்தில் பற்றி எரியும் ஆசையை வளர்த்து கொள்வது மிக அவசியம். அது நிகழ்ந்துவிட்டால், உங்களுக்குள் ஏராளமான திட்டங்கள் தானாக தோன்றும். திட்டங்கள் என்பவை உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவும் கருவிகள் ஆகும். உங்கள் செயல்கள் மூலம் எத்தனை நபர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்பது தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும். உங்களுடைய நோக்கம் எப்போதும் உங்களை தாண்டிய பெரும் திரளான மக்களுக்கு பயன் தரும் ஒன்றாக இருக்கட்டும்.

உங்களுடைய வர்த்தகம் வளரும் போது, வர்த்தகம் என்பது பணத்தை பற்றியது அல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள். வர்த்தகம் என்பது வளர்ச்சியை பற்றியது; எத்தனை மனிதர்களை நீங்கள் தொட்டு இருக்கிறீர்கள், உங்களுடைய பொருட்கள் அல்லது சேவைகளின் மூலம் இந்த பூமியில் இருப்பவர்களின் வாழ்வின் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை பற்றியது. ஆகவே, உங்களை தாண்டிய ஒரு மாபெரும் நோக்கத்தை உங்களுக்குள் வளர்த்து கொள்ளுங்கள்.

இந்த பெருந்தொற்று காலம் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், தேசங்களுக்கும் பெரிய சவாலான விஷயமாக உள்ளது. அதேசமயம், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தங்களின் தலைமை பண்பை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கும் காலம் ஆகும்” என்றார்.

செரோதா நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. நிதின் காமத், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு.நாகேஷ் பசவனஹள்ளில் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வர்த்தக தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் தங்களின் வெற்றி சூத்திரங்களை இளம் வர்த்தக தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஈஷா இன்சைட் நிகழ்ச்சியானது நவம்பர் 25-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வளர்ந்து வரும் வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேலும் அதிகரிப்பதற்காக ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் கடந்த 10 வருடங்களாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios