தமிழகத்தின் தண்ணீர் தேவை  அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளதாகவும், ஆனால் அதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த முன்னாள் மேயர் மலரவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், கோவை நகரின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை: குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவியுங்கள் - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார். 

மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

அதிமுக ஆட்சிக்காலத்தில் 6 தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியதாகவும், அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாக குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.