கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பிப்ரவரி 14 ம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கோவையைச் சேர்ந்த பாஷா, அன்வர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது. அவர்களுக்கு ஆயுள்தண்டனையும் மற்றவர்களுக்கு 10 ஆண்டு, 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர். சிலர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் விடுதலை ஆயினர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். கோவை உக்கடத்தை சேர்ந்த சாதிக் என்கிற ராஜா என்கிற டெய்லர் ராஜா என்கிற வளர்ந்த ராஜா (43), முஜிபுர் ரகுமான் என்கிற முஜி (50), ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பலவருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் தற்போது கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர். அதே போல திருச்சி, மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் (55), அயூப் என்கிற அஸ்ரப் அலி ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களது புகைப்படமும் வெளியிடப்பட்டு தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

4 பேர் குறித்தும் தகவல் தெரிவித்தால் மொத்தமாக 8 லட்சம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.